
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.
இதனையடுத்து வெற்றிக் கோப்பையுடன் இன்று அதிகாலையில் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தங்கும் விடுதி வரை வழியெங்கும் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் இந்திய வீரர்கள் நடுனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றனர். அதன்பின் பின்னர் மதியம் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, மும்பை நரிமண் முனையத்தில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரம்மாண்ட வெற்றிப் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பிசிசிஐ தரப்பில் திறந்த வெளி பேருந்து உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.