
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்காக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அந்த அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் துணைக்கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் இஷான் கிஷான், துருவ் ஜூரெல், பிரஷித் கிருஷ்ணா, சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல், முகேஷ் குமார், கலீல் அஹ்மத் ஆகியோரும் இடம்பிடித்துள்ளன.