
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அனியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணியில் ஷத்மான் இஸ்லாம் 12 ரன்களையும், ஜாகிர் ஹசன் 11 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் ஜாகிர் ஹசன் 12 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 16 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, பின்னர் இணைந்த ஷாத்மன் இஸ்லாம் - மொமினுல் ஹக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.