
இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது ப்ளூம்ஃபோன்டைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணியானது மையா பௌச்சர் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 395 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 128 ரன்களையும், மையா பௌச்சர் 126 ரன்களையும் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 65 ரன்னில் வோல்வார்ட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராஙகனைகளில் மாரிஸான் கேப் 57 ரன்களையும், சுனேஷ் லூஸ் 56 ரன்க்ளையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இவர்களைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் லாரன் பெல் 4 விக்கெட்டுகளையும், லாரன் ஃபிலர், ரியானா மெக்டொனால்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் முன்னிலைப் பெற்றது.