
இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது இன்று ப்ளூம்ஃபோன்டைனில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட் 21 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் 20 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த மையா பௌச்சர் - நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதுடன் இருவரும் சதமடித்து அசத்தினர். மேற்கொண்டு மூன்றாவது விக்கெட்டிற்கு 174 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
பின்னர் 22 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 126 ரன்களைச் சேர்த்த நிலையில் மைய பௌச்சர் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேனியல் வையட்12 ரன்களிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் 18 பவுண்டரிகளுடன் 128 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் ஏமி ஜோன்ஸ் 39 ரன்களையும், சோஃபி எக்லெஸ்டோன் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.