
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்தியா -இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்திருந்தன. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் முதல் முறையாக இங்கிலாந்தில் இந்திய அணி டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதுபிக்கப்பட்ட மகளிர் டி20 தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் இரண்டாம் இடத்திலும், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.