
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர்கள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸும், வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணியும் என 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடர்களை கைப்பற்றி அசத்தியுள்ளன.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலின் முதல் 8 இடங்களில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. இதில் முதல் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் நிடிக்கும் நிலையில், அடுத்தடுத்த இடங்களில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.
அதேசமயம் இந்த பட்டியலில் இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா ஒரு இடம் முன்னேறி 9ஆம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் 2 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதுதவிர்த்து இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் 2 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தையும், கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 17ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 11 இடங்கள் முன்னேறி 23ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.