
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
இந்நிலையில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் காயம் காரணமாக கடந்தாண்டு முதல் இந்திய அணிக்கு திரும்பாமல் இருக்கும் முகமது ஷமி, பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இத்தொடரிலும் அவரால் இடம் பிடிக்கமுடியவில்லை. கடந்தாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார்.