
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அணியின் புதிய கேப்டன் யார், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்களை யார் நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த சுற்றுப்பயணத்தில் இன்னும் பல வீரர்களும் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் டெஸ்ட் அணியில் இருந்து விலகி இருந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் இத்தொடரில் இடம்பிடிப்பார் என்று கூறப்படுகிறது,
முன்னதாக நடந்து முடிந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ஷர்தூல் தாக்கூர் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதன் காரணமாக நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் போதே அவர் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.