
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங்கில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 51 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களையும், தீபக் ஹூடா 33 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 148 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.