
இந்திய சீனியர் ஆடவர் அணிக்கான புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்றைய தினம் வெளியிட்டது. இதில் வழக்கம்போல் ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் ஏ+ கிரேடில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு மட்டுமே இடம் கிடைத்தது.
அதன்பின் ஏ கிரேடில், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சமி, முகமது சிராஜ் ,கே எல் ராகுல், ஷுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது பெயர்களும், பி கிரேடில், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும், இதில் கடைசி பிரிவான சி கிரேடில் ரிங்கு சிங், திலக் வர்மா,ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஸ்னோய், ஜித்தேஷ் சர்மா, வாசிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பரத், பிரசீத் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ராஜத் பட்டித்தர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்த இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது பெயர்களை பிசிசிஐ தனது ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளது. காரணம் இருவரும் பிசிசிஐ-யின் உத்தரவையும் மீறி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இஷான் கிஷானை இந்திய டி20 அணியிலிருந்து கழட்டிவிட்டுள்ள பிசிசிஐ, இங்கிலாந்து க்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயரையும் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கியது.