ஐசிசி உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதற்கு தயாராக தற்போது ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா ஆரம்பத்திலே கோப்பையை வென்றுள்ளது.
இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 14 மாதங்கள் கழித்து கம்பேக் கொடுத்து விளையாடி வருகிறார்கள். ஆனால் அவர்களை மிஞ்சும் அளவுக்கு முதல் போட்டியில் 60 ரன்கள் 1 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற ஷிவம் துபே, 2ஆவது போட்டியில் 63 ரன்கள் 1 விக்கெட் எடுத்து இந்தியாவின் அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றி அபார கம்பேக் கொடுத்துள்ளார்.
கடந்த 2019இல் அறிமுகமாகி சுமாராக செயல்பட்ட அவர் கடந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் 411 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணி 5ஆவது கோப்பையை வெல்ல உதவினார். அதனால் ஃபார்முக்கு திரும்பி பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ள அவர் தற்போது இந்திய அணியிலும் அசத்தி வருவதால் ஹர்டிக் பாண்டியாவுக்கு போட்டியாக 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வாக வேண்டும் என்பது சில ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.