இந்தியா தோல்வியை சந்தித்தது நிம்மதியை கொடுத்துள்ளது - சோயப் அக்தர்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது ஒரு வழியாக பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் எனக்கும் ஒரு நிம்மதியை கொடுத்துள்ளது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி சூப்பர் 4 போட்டியில் ஏற்கனவே முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவை சூப்பர் 4 சுற்றுடன் முதல் அணியாக வெளியேறிய வங்கதேசம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் விராட் கோலி, பும்ரா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் போராடி 265/8 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 80, தஹீத் ஹிரிடோய் 54 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 266 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 0, திலக் வர்மா 5, கேஎல் ராகுல் 19, இசான் கிசான் 5, சூர்யகுமார் யாதவ் 26, ரவீந்திர ஜடேஜா 7 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். அதனால் ஷுப்மன் கில் 121, அக்சர் படேல் 42 ரன்கள் எடுத்தும் 49.5 ஓவரில் இந்தியா 259 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
Trending
அந்தளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஆறுதல் வெற்றி பெற்ற வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தப்பிசுர் ரஹ்மான் 3 விக்கெட்கள் எடுத்தார். அதன் வாயிலாக சச்சின் 100ஆவது சதமடித்த 2012 போட்டிக்கு பின் ஆசிய கோப்பையில் வங்கதேசத்திடம் 11 வருடங்கள் கழித்து இந்தியா அவமான தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் வங்கதேசத்திடம் இப்படி இந்தியா தோல்வியை சந்தித்தது தமக்கும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் ஓரளவு நிம்மதியை கொடுத்துள்ளதாக சோயப் அக்தர் கூறியுள்ளார். அதாவது இதே தொடரில் 228 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கொடுத்து பாகிஸ்தான் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இந்தியா, இறுதிப்போட்டிக்கு முன்பாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா அவமானப்படும் வகையில் தோல்வியை சந்தித்தது. இதற்காக அதிகமாக நாம் விமர்சிக்க முடியாது. ஏனெனில் வங்கதேசமும் இங்கு விளையாட வந்துள்ளது. இலங்கையைப் போலவே வங்கதேசமும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அணியாகும். இப்போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது ஒரு வழியாக பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் எனக்கும் ஒரு நிம்மதியை கொடுத்துள்ளது.
இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரமாகும். ஏனெனில் சில போட்டிகளில் வென்ற பின் இது போன்ற எதிரணிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள். மேலும் உலகக்கோப்பையில் இந்தியா அல்லது பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று நாம் சொல்கிறோம். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுடன் சிறிய அணிகளும் பெரிய சவாலை கொடுக்கும் என்பதை மறக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now