வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தோல்வி; பாகிஸ்தானை விமர்சித்த சோயப் அக்தர்!
கடந்த 10-15 ஆண்டுகளில், அனைவரும் தங்களுக்காக விளையாடத் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பாகிஸ்தான் அணியை விமர்சித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததை அடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது.இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையிலும், கேப்டன் ஷாய் ஹோப் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 120 ரன்களைச் சேர்த்தார்.
இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, அப்ரார் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் சல்மான் ஆகா 30 ரன்களையும், முகமது நவாஸ் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 92 ரன்களில் ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. மேலும் கடந்த 1991ஆம் ஆண்டிற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியானது பாகிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றியும் சாதனையைப் படைத்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு அந்த அணியின் முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர், "எங்களிடம் அதிரடியாக விளையாடும் திறமை இருந்தது, அதற்கேற்ப விளையாடினோம். நாங்கள் ஒருபோதும் ஒரு வீரரை நம்பியிருக்கவில்லை, அனைவரும் பங்களித்தனர். யாரும் வெளியேற வழி தேடவில்லை. ஆனால் தற்போது சூழல் மாறிவிட்டது, கடந்த 10-15 ஆண்டுகளில், அனைவரும் தங்களுக்காக விளையாடத் தொடங்கியுள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
அனைவரும் தங்கள் சராசரிக்காக விளையாடுகிறார்கள். ஆனால் நாட்டிற்காக போட்டிகளில் வெற்றி பெறுவதே வீரர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். நாம் நமது நோக்கத்தையும் மனநிலையையும் மாற்றி, அந்த மாதிரியான சூழலை உருவாக்க வேண்டும். எல்லா இடங்களிலும் ராவல்பிண்டி பிட்சுகளுடன் நாம் சுற்றித் திரிய முடியாது என்பதை வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று விமர்சித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now