நிகழ் காலத்தில் மட்டுமே இருக்க விரும்புகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் தேர்வு செய்யப்படாதது நினைத்து வருத்தப்படவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெறாத சில இந்திய வீரர்களுக்கு மத்தியில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒருவரானார். குறிப்பாக கடந்த தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கடந்த டி20 தொடரில் துணை கேப்டனாக விளையாடிய அவர் இந்த தொடரில் விளையாடும் 11 பேர் அணியில் கூட இடம் பெறாதது சில முன்னால் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்த வருடம் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் அதிலிருந்து குணமடைந்து 2023 உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் சரவெடியாக விளையாடும் திறமையை வெளிப்படுத்தாததால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நம்பப்படுகிறது. போதாக்குறைக்கு ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளில் அவுட்டாகும் பலவீனத்தை கொண்டிருப்பதால் அவரை அனைத்து போட்டிகளிலும் தேர்ந்தெடுக்க தேர்வு குழுவும் யோசிக்கின்றனர்.
Trending
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் தேர்வு செய்யப்படாதது நினைத்து வருத்தப்படவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். மேலும் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி அடுத்த நடைபெற உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கும் அவர் டி20 கிரிக்கெட்டில் இனிமேல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அட்டாக் செய்யும் ஆட்டத்தை வெளிப்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “முதலில் நான் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்க விரும்புகிறேன். என்னை விளையாடச் சொல்லி கேட்ட போட்டியில் விளையாடி முடித்துள்ள நான் தற்போது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாதவற்றில் நான் வருத்தப்பட்டு கவனம் செலுத்த விரும்பவில்லை. ரஞ்சிக் கோப்பையில் விளையாட வந்துள்ள நான் அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.
இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் வருங்காலங்களில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அட்டாக் செய்யும் கிரிக்கெட்டை விளையாட போகிறேன். எதிரணிகள் எப்படி வீசினாலும் நீங்கள் ரன்கள் அடித்து உங்களுடைய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். இது தான் இப்போதைக்கு என்னுடைய மனநிலையாக இருக்கிறது. என்னுடைய செயல்பாடுகளிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே உலகக் கோப்பையில் ஏதேனும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றே சொல்லலாம். அத்துடன் சமீபத்திய தொடர்களில் மிடில் ஆர்டரில் விளையாடி கேஎல் ராகுல் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் டெஸ்ட் அணியிலும் கூட ஸ்ரேயாஸ் ஐயருக்கு போட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now