ENG vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்?
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனில் நீடிக்கின்றன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பயிற்சியின் போது பேட்டிங் செய்கையில் அவர் காயத்தை சந்தித்துள்ளதாகவும், அதற்கான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட தமாத்தினாலேயே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
More Injury Trouble For India! #INDvENG #India #England #ShreyasIyer #Shreyas pic.twitter.com/Y8e8yBVNnB
— CRICKETNMORE (@cricketnmore) February 9, 2024
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய நிலையில், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என தகவல் வெளியானது. அதேபோல் காயம் காரணமாக இரண்டாவது போட்டியிலிருந்து விலகிய ரவீந்திர ஜடேஜாவும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகவுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட சர்ஃப்ராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌரவ் குமார் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இஷான் கிஷானும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now