
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரானது மீண்டும் இந்தியாவில் நடைபெறும் என்றும் அதில் ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுடன் இந்த தொடர் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய 2 அணிகளுக்கான ஏலம் அண்மையில் துபாயில் நடைபெற்று முடிந்தது. இதில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் ஐபிஎல் தொடரில் இணைந்துள்ளன. அதுமட்டுமின்றி வீரர்களுக்கான ஏலமும் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக முதல் பாதியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது பாதியில் அணியில் பேட்ஸ்மேனாக தொடர்ந்தார். முதல் பாதியில் கேப்டனாக நியமிக்கப்பட்ட பந்த் இரண்டாவது பாதியிலும் கேப்டனாக செயல்பட்டார்.