
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா -வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதியுடன் முடிவடைவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27ஆம் தேதி கன்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேற்கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அக்டோபர் 06ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் தங்களை தயார்செய்யும் வகையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடும் படி பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்க இருக்கும் பாரம்பரியமிக்க புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர்கள் தங்கள் சொந்த மாநில அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.