
இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்டரான ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அற்புதமாக செயல்பட்ட அவர் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு அந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அதனை தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த அவர் பாதியிலேயே அந்த தொடரில் இருந்து வெளியேறினார். அதுமட்டும் இன்றி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
இந்நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்து பயணித்துள்ள அவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மூன்று மாத ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.