
சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக மிகப்பெரிய தொடர்கள் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் ஆசியக்கோப்பை தொடர், அதைத்தொடர்ந்து அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் என இடைவிடாமல் நடக்கிறது. அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இன்னும் நூறு நாட்களுக்கும் குறைவாகவே இருக்கிறது.
இந்திய அணி வருகிற ஜூலை 10ஆம் தேதிக்கு மேல் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் முன்னணி இந்திய வீரர்கள் சிலர் இடம்பெறவில்லை காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கும் பும்ரா, தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் குணமடைந்து வருகிறார். அவருக்கு பயிற்சி போட்டிகள் நடைபெற்று அதில் உடல்தகுதியை பெற்றபின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார். அனேகமாக அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாட வைக்கப்படலாம் என்றும் கூறினார்.