சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அறிமுக ஆட்டத்தில் சதமடித்த 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார்.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மான் கில் அற்புதமான சதத்தை அடித்து வரலாறு படைத்தார்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் மற்ற டாப் ஆர்டர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஷுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு 129 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். இது ஷுப்மன் கில்லில் 8ஆவது ஒருநாள் சதமாகும். இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஷுப்மன் கில் தனது பெயரில் சில சாதனைகளையும் பதிவுசெய்துள்ளார்.
Also Read
அதன்படி, இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 8 சதங்களை அடித்த வீரர் எனும் ஷிகர் தவானின் சாதனையை ஷுப்மன் கில் தகர்த்துள்ளார். முன்னதாக ஷிகர் தவான் 57 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்த நிலையில், தற்போது ஷுப்மன் கில் 51 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
அதிவேகமாக 8 ஒருநாள் சதமடித்த இந்திய வீரர்கள்
- 51 இன்னிங்ஸ் – ஷுப்மான் கில்*
- 57 இங்கிலாந்து - ஷிகர் தவான்
- 68 இன்னிங்ஸ் - விராட் கோலி
இதுதவிர்த்து சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ஷுப்மன் கில் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், முகமது கைஃப் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் மட்டுமே சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சதமடித்த வீரர்கள்
- சச்சின் டெண்டுல்கர் vs ஆஸ்திரேலியா (1998)
- முகமது கைஃப் vs ஜிம்பாப்வே (2002)
- ஷிகர் தவான் vs தென் ஆப்பிரிக்கா (2013)
- ஷுப்மான் கில் vs வங்கதேசம் (2025)
முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில், ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார். அதிலும் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக இரு அரைசதம் மற்றும் ஒரு சதத்தை அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக தாவ்ஹித் ஹிரிடோய் 100 ரன்களையும், ஜக்கர் அலி 67 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சதமடித்து அசத்தியதுடன் 101 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேஎல் ராகுல் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 46.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now