ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக கொண்டாடப்பட்டு வருபவர் ஷுப்மன் கில். இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவானை கழற்றிவிட்டு ஷுப்மன் கில்லை தேர்வு செய்தது இந்திய அணி நிர்வாகம். அதுவும் 6 மாதத்திற்கு முன்பாகவே உலகக்கோப்பை தொடரில் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரர் என்பதில் ரோஹித் சர்மா தெளிவுடன் இருந்தார்.
அதற்கேற்ப நடப்பாண்டில் மட்டும் ஷுப்மன் கில் 5 சதங்களை விளாசி அசத்தியிருந்தார். இதனால் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி மற்றும் டெல்லியில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியவில்லை.
Trending
அதன்பின் அஹ்மதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். ஆனால் வெற்றிக்கு அவசரப்பட்ட ஷுப்மன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 37 இன்னிங்ஸ்களில் 6 சதம் மற்றும் 10 அரைசதம் உட்பட 1,986 ரன்கள் விளாசியிருந்தார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பு கில்லுக்கு கிடைத்தது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் சுப்மன் கில் 14 ரன்களை கடந்த போது 2 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
இவருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் ஹஷிம் ஆம்லா 40 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. இவரது சாதனையை முறியடித்து ஷுப்மன் கில் 38 இன்னிங்ஸ்களில் விளாசி இருக்கிறார். அதேபோல் இளம் வயதில் இந்திய அணிக்காக 2 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஷுப்மன் கில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 2ஆவது இடத்தில் யுவராஜ் சிங்கும், மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், 4ஆவது இடத்தில் சுரேஷ் ரெய்னா ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now