
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அதன்படி ஷுப்மன் கில் இப்போட்டியில் 38 ரன்களை சேர்த்ததன் மூலம் அஹ்மதாபாத் மைதானத்தில் தன்னுடைய 1000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே மைதானத்தில் மிக குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் எனும் பேருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக டேவிட் வார்னர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் 22 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் குவித்து இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் ஷுப்மன் கில் 20 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.