
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதன் காரணமாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளில் வாய்ப்பு கிடைத்த அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பாக செயல்பட்டு பங்காற்றி வருகிறார்கள் என்று சொல்லலாம்.
குறிப்பாக பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு அசத்தி வருகிறார்கள். சொல்லப்போனால் அவர்களை விட சமீபத்திய போட்டிகளில் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக காய்ச்சல் வந்ததால் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாடாத அவர் சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சையை எடுத்துக்கொண்டு மீண்டும் குணமடைந்து விளையாடி வருகிறார். ஆனாலும் இதுவரை வெறும் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ள அவர் இந்த உலகக் கோப்பையில் எதிர்பார்த்ததை விட சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார்.