
இந்திய கிரிக்கெட் அணி வருகிற 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்லாமல் இருக்கிறது. இம்முறை அந்த வாய்ப்பு கைகூடி வந்திருக்கிறது. இதை நழுவவிடாமல் இருக்க பிசிசிஐ பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
இந்திய அணி வெற்றிபெற, அணியில் சிறந்த ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் பைனலில் முக்கியமான வீரராக இருப்பார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் முதல் கில் வெளிப்படுத்தி வரும் ஆட்டம் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இவர் குவித்து வரும் சதங்கள் இவரின் மீது பெரும் கவனத்தை கொடுத்திருக்கிறது.
மேலும் ஐபிஎல் தொடரிலும் கில் தனது ஃபார்மை தொடர்ந்துள்ளார். ஆகையால் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் அவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். டாப் ஆர்டரில் இந்திய அணிக்கு பெருத்த நம்பிக்கையை கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஷுப்மன் கில் சுதாரிப்பாக இருக்க வேண்டும். அவரிடம் வேகம் இருக்கிறது. அதேபோல் விவேகத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் முரளி விஜய் அறிவுரை கூறியுள்ளார்.