
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அடுத்ததாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணி தீவிரமாக உள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
ஆனால் இம்முறை புதிய வரலாறு படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர பவுலர்கள் காயமடைந்துள்ள நிலையில், இந்திய அணியும் முழு பலத்துடன் களமிறங்கவுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி காயமடைந்து விலகினாலும், பும்ரா, சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.
கடந்த முறை தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஷர்துல் தாக்கூர் ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் 4ஆவது வேகப்பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூர் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடக்கவுள்ள நிலையில், அந்த மைதானத்தில் இருந்து சிறிய தூரத்தில் அமைந்துள்ள டுக்ஸ் ஓவல் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.