
இந்தியாவில் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி கேஎல் ராகுல் தலைமையில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இதற்கு முன்பாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் அந்த அணிக்கு எதிராக விளையாடியது.
முதல் இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, அடுத்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோற்று, அந்த தொடரை இழந்தது. மேலும் அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய நான்கு நட்சத்திர வீரர்கள் காயத்தால் இடம் பெறவில்லை. உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பயன்படுத்திக்கொள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது. மூன்று போட்டிகளையும் தேவைப்படும் எல்லா வீரர்களுக்கும் பிரித்து தர திட்டம் செய்திருந்தது. இந்த நிலையில் இந்தத் தொடருக்கு இந்திய அணி நிர்வாகம் புத்திசாலித்தனமாக முதல் இரண்டு போட்டிகளுக்கு முக்கிய நான்கு வீரர்களுக்கு ஓய்வு கொடுத்திருந்தது. ரவிச்சந்திரன் அஸ்வினை பரிசோதிப்பதற்கான களமாகத் தொடரை பயன்படுத்தியது. தற்போது இதில் வெற்றியும் கண்டிருக்கிறது.