
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நாளை தர்மசாலா நகரில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. சொல்லப்போனால் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் நிறைந்திருக்கின்றனர்.
அதனால் இப்போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சகட்டமாக காணப்படுகிறது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை நியூசிலாந்து எப்போதுமே ஐசிசி தொடர்களில் இந்தியாவை பெரும்பாலும் தெறிக்க விடும் அணியாக இருந்து வருகிறது என்று சொல்லலாம். ஏனெனில் 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை சந்தித்த 9 போட்டிகளில் நியூசிலாந்து 5 முறை வென்று முன்னிலையில் இருக்கிறது.
இந்தியா 3 முறை மட்டுமே வென்ற நிலையில் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதை விட 2000 சாம்பியன்ஸ் கோப்பை ஃபைனலில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றதை போலவே 2016 டி20 உலக கோப்பையில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து தோற்கடித்தது. அத்துடன் 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆரம்பத்திலேயே விராட், ரோஹித் போன்றவர்களை சாய்த்த நியூஸிலாந்து கடைசியில் தோனியை ரன் அவுட்டாக்கி இந்தியாவை வீழ்த்திய கதையை ரசிகர்களுக்கு சொல்லித் தெரியவில்லை.