ஆஃப்கானுக்கு எதிரான போட்டியையும் தவறவிடும் ஷுப்மன் கில்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் விளையாட வாய்ப்பில்லை என்று இந்திய அணி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், விராட் கோலி - கேஎல் ராகுல் இருவரும் அபாரமான ஆட்டத்தால், அபார வெற்றியை இந்தியா அடைந்தது.
இந்த போட்டியில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் களமிறங்கவில்லை. நேற்று காலை வரை இந்திய அணி நிர்வாகம் ஷுப்மன் கில் உடல் நிலையை இந்திய அணி கண்காணித்தது. ஆனால் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ஃபிட்னஸை ஷுப்மன் கில் பெற முடியாததால், அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இதனால் மாற்று தொடக்க வீரராக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டார்.
Trending
ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன், மிட்செல் ஸ்டார்க்கை எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து டக் அவுட்டாகி வெளியேறினார். தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இஷான் கிஷன் சொதப்பி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் ஷுப்மன் கில் விரைந்து குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணி நாளை மறுநாள் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து டெல்லி மைதானத்தில் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டனர். அந்த அணியினருடன் ஷுப்மன் கில் பயனிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஷுப்மன் கில் சென்னையிலேயே தங்கிவிட்டதாகவும், அவரை இந்திய அணி மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஷுப்மன் கில் பங்கேற்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் அடுத்த போட்டியிலும் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணியே தொடக்கம் கொடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now