
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதலிரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் நாளை பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக டெங்கு காய்ச்சல் காரணமாக இந்திய அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் திரும்பினார். அப்போது டெங்கு காய்ச்சல் வந்து, குணமடைந்தாலும் 10 நாட்களுக்கு அவரால் பயிற்சியில் ஈடுபட முடியாது என பல செய்திகள் வலம் வந்தன.
மேலும், ஷுப்மன் கில்லை அணியில் இருந்தே நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்யும் என்ற தகவலும் கூறப்பட்டது. இந்தியா அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட உள்ள நிலையில், அதில் ஷுப்மன் கில் விளையாட வாய்ப்பே இல்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால், ஷுப்மன் கில் சென்னையில் இருந்து நேராக பாகிஸ்தான் போட்டி நடக்கும் அஹ்மதாபாத்துக்கு சென்று, பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.