-lg1-mdl.jpg)
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பைக்கு தொடருக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணியானது ஜூலை 5 முதல் ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 சர்வதேச தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக இத்தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மான் கில் அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின் படி, ஷுப்மன் கில்லின் ஆல்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு காயம் இருந்தபோதிலும், அவர் 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அமெரிக்காவில் நடந்த குரூப் ஸ்டேஜ் போட்டிகளுக்குப் பிறகு ஷுப்மன் கில் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளார். இதையடுத்து அவரது காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும், தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் அதுகுறித்த இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.