
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது. முன்னதாக இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் ஜிம்பாப்வே ஒரு வெற்றியும், இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கின்றன. இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் டி20 தொடரை கைப்பற்றும்.
அதேசமயம் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்றால் தொடர் சமனிலைக்குச் சென்று, அடுத்த போட்டியின் முடிவைப் பொடுத்து தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும். இதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல் ரவுண்டருமான சிக்கந்தர் ரஸா புதிய சாதனை ஒன்றையும் படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் சிக்கந்தர் ரஸா 17 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை அடிப்பார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக இரண்டாயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.