
தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஜொஹனன்ஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக்(8) மற்றும் டெம்பா பவுமா(6) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய வாண்டர்டசன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று அதிரடியாக பேட்டிங் செய்த ஐடன் மார்க்ரம் சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் மாபெரும் இன்னிங்ஸை விளையாடிய மார்க்ரம் 126 பந்தில் 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 175 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அவருடன் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லரும் அதிரடியாக பேட்டிங் செய்து 91 ரன்களை குவித்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஆனால் 61 பந்தில் 91 ரன்களை குவித்தார். மார்க்ரம், டேவிட் மில்லரின் அதிரடியான பேட்டிங்கால் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 370 ரன்களைக் குவித்தது.