SL vs AFG, 1st T20I: ஆஃப்கானை திணறவைத்த பதிரனா; இலங்கை த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பதும் நிஷங்கா 06 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து ஃபசல்ஹக் ஃபரூக்கி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த டி சில்வா - சமரவிக்ரமா இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 24 ரன்கள் எடுத்திருந்த போது தனஞ்செயா டி சில்வா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சரித் அசலங்காவும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Trending
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் வநிந்து ஹசரங்கா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வர, மறுமுனையில் 25 ரன்களை எடுத்திருந்த சதீரா சமரவிக்ரமா ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இருப்பினும் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்த வநிந்து ஹசரங்கா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 2ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 32 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 67 ரன்களை எடுத்த நிலையில் ஹசரங்காவின் விக்கெட்டை நவீன் உல் ஹக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, தசுன் ஷனகா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கு 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயந்தது. இதில் குர்பாஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்ராஹிம் ஸத்ரான் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய குல்பதின் நைப் 16 ரன்களுக்கும், அஸ்மதுல்லா ஒமார்ஸாய் 2 ரன்களுக்கும், முகமது நபி 9 ரன்களுக்கும், நஜிபுல்லா ஸத்ரான் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸத்ரான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் கரிம் ஜானத் 20 ரன்களிலும், கைஸ் அஹ்மத் 7 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற கடைசி 2 ஓவர்களில் 14 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அதன்பின் இலங்கை அணி தரப்பில் 19ஆவது ஓவரை வீசிய மதீஷா பதிரனா அந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே கொடுத்ததுடன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றிபெற 11 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.
இலங்கை தரப்பில் கடைசி ஓவரை பினுரா ஃபெர்னாண்டோ வீச அந்த ஓவரில் 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் 67 ரன்களைச் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரானா 4 விக்கெட்டுகளையும், தசுன் ஷனகா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now