
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது. இலங்கை அணி ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடனும், மறுபக்கம் வங்கதேச அணி அடுத்தடுத்து தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா காயம் காரணமாக வங்கதேச டி20 தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வநிந்து ஹசரங்கா காயத்தை சந்தித்ததாகவும், இதற்காக அவர் சிகிச்சை மேற்கொள்ள கொழும்பு செல்ல வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.