
இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீண்டது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் தனது சதத்தை பதிவுசெய்ய, மறுபக்கம் குசால் மெண்டிஸ் தனது அரைசதததைப் பதிவுசெய்தார். இதன்மூலம், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்களையும், குசால் மெண்டீஸ் 50 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் லேதமுடன் இணைந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். பின்னர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டாம் லேதம் 70 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேன் வில்லியம்சனும் 55 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திராவும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.