
இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியும், ராஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணியும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மத்திய பிரதேச அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை . அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அர்பித் கௌத் 3 ரன்னிலும், ஹர்ஷ் கௌலி 2 ரன்னிலும், ஹர்ப்ரீத் சிங் 15 ரன்னிலும், ஷுப்ரன்ஷு சேனாபதி 23 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ராஜத் பட்டிதார் - வெங்கடேஷ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ராஜத் பட்டிதார் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்ட நிலையில், மறுமுனையில் வெங்கடேஷ் ஐயர் 17 ரன்னிலும், ராகுல் பதம் 19 ரன்னிலும், திரிபுரேஷ் சிங், ஷிவம் சுக்லா ஆகியோர் சொற்ப ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஜத் பட்டிதார் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்தார்.