
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நவி மும்பையில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 217 ரன்களைக் குவித்தது. இதில் ஸ்மிருதி மந்தனா 77 ரன்னும், ரிச்சா கோஷ் 54 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 39 ரன்னும், ராகவி பிஸ்ட் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து களமிறங்கியது. அந்த அணியின் சின்னெலே ஹென்றி 16 பந்தில் 43 ரன்கள் குவித்ததை தவிர்த்து மற்ற வீராங்களை சோபிக்க தவறினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.