
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி நிர்ணயித்த 345 ரன் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 345 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் அப்துல்லா ஷாபீக், முகமது ரிஸ்வான் சதம் அடித்து அசத்தினர். இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது முகமது ரிஸ்வானுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு ரிஸ்வான் தொடர்ந்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் ஆட்டத்தின் இடையில் எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான் அதேநேரம் சில சமயங்களில் நான் நடித்தேன் என ரிஸ்வான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியா அவர், “எப்பொழுதுமே நமது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது நாம் பெருமை கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த ஆட்டத்தில் நான் எனது அணியின் வெற்றிக்கு பங்காற்றியதை நினைத்து பெருமை கொள்கிறேன். இப்போது பேசுவதற்கு என்னிடம் வார்த்தை இல்லை அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.