X close
X close

விராட் vs சச்சின்; கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கங்குலி!

இலங்கையுடனான போட்டியில் சதமடித்த பிறகு புதிய சர்ச்சையில் சிக்கிய விராட் கோலிக்கு முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 12, 2023 • 13:50 PM

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி கண்ட சூழலில் 2ஆவது போட்டி இன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரை கைப்பற்ற இந்திய அணியும், சமன் செய்ய இலங்கை அணியும் முணைப்பு காட்டி வருகின்றன.

இந்த போட்டியை தாண்டி விராட் கோலியின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்த விராட் கோலி, ஆண்டின் கடைசி போட்டியாக வங்கதேசத்துடன் சதமடித்திருந்தார். தற்போது 2023ஆன் முதல் போட்டியையும் சதத்துடன் தொடங்கிவிட்டார். கோலி இன்னும் 4 சதங்களை மட்டும் அடித்துவிட்டால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ( 49 சதங்கள் ) சச்சினை சமன் செய்துவிடுவார்.

Trending


இதனால் சச்சின் டெண்டுல்கரை விட சிறப்பாக விளையாடி முந்திவிடுவாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசியிருந்த கம்பீர், “200 சதங்களை அடித்தாலும் கோலி சச்சினாக முடியாது. அப்போது இருந்த விதிமுறை வேறு, இப்போது உள்ளது வேறு” என விமர்சித்தார். இதற்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் தக்க பதிலடி கொடுத்திருந்தார். சச்சினை போல ஓப்பனிங் ஆடாமல், 3ஆவது வீரராக விளையாடியே சாதித்துவிட்டார் எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சவுரவ் கங்குலி குரல் எழுப்பியுள்ளார். அதில், “சச்சினை கோலி முந்திவிடுவார, அவரை விட சிறந்தவரா என்ற கேள்வியே கடினமான ஒன்று. விராட் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர். இந்திய அணி பல கடினமான சூழல்களில் சிக்கிய போதெல்லாம் விராட் கோலி தனி நபராக போராடி வென்றுக்கொடுத்துள்ளார். 45 சதங்கள் என்பது சாதாரணமாக வந்துவிடாது.

சில வருடங்கள் விராட் கோலிக்கு சரியாக அமையாதது உண்மை தான். சரிவர ரன் குவிக்கவில்லை. ஆனால் அவர் ஒரு ஸ்பெஷலான வீரர். என்றுமே அவருக்கான பெருமைகள் இருக்கத்தான் செய்யும்” என கங்குலி ஆதரவுக்கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளையும் எடுத்துக்கொண்டால் சச்சின் 100 சதங்களை அடித்துள்ள சூழலில் விராட் கோலி 74 சதங்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now