
ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் தொடங்க உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வலுவான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துவதற்கு போராட உள்ளது.
இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் விளையாட உள்ளன. அந்த வகையில் இத்தொடரின் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை முத்தமிடுவதற்கான வாய்ப்பை கொடுக்கும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற போகும் 4 அணிகள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் கடந்த 10 வருடங்களாக கோப்பையை வெல்லாவிட்டாலும் பெரும்பாலும் நாக் அவுட் சுற்றை எட்டி வரும் இந்தியா இம்முறையும் சொந்த மண்ணில் குறைந்தபட்சம் அரையிறுதி போட்டிகளில் விளையாடும் ஒரு அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல 5 கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா கடந்த பிப்ரவரியில் இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்தது போல இத்தொடரிலும் நாக் அவுட் சுற்றை நெருங்கும் என்று நம்பப்படுகிறது.