
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த் வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிகள் முன்னேறின.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஒடிசா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறஙிய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் மற்றும் கோஸ்வாமி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கோஸ்வாமி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹாமில்டன் மஸகட்ஸா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய மார்ட்டின் கப்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய பவன் நெகியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹாமில்டன் மஸகட்ஸா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பவன் நெகி 33 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த ஹாமில்டன் மஸகட்ஸா 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.