
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவு பெற்றது. ஏற்கனவே இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த வேளையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது. குறிப்பாக ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி இரண்டாம் நாள் ஆட்டமான இன்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை சமன் செய்தது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா முதல் இன்னிங்சில் 2 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். மேலும் அவர் ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியின் போது 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் இந்த டெஸ்டில் தொடரில் மட்டும் மொத்தம் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.
இந்நிலையில் போட்டி முடிந்து இந்த தொடர் நாயகன் விருது குறித்து பேசிய ஜஸ்பிரீத் பும்ரா, “இந்த மைதானம் எப்பொழுதுமே என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு மைதானம். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்கிற என்னுடைய கனவு இந்த மைதானத்தில் தான் எனக்கு தொடங்கியது. நான் முதல் போட்டியில் இங்கு விளையாடிய நினைவுகள் இன்றளவும் என்னுள் அப்படியே இருக்கிறது.