
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்களும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 565 ரன்களையும் சேர்த்தனர். பின்னர் 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியானது 146 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.
இதன் காரணமாக வங்கதேச அணிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 6.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணியானது இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் தேர்வு செய்யப்பட்டார்.