இங்கிலாந்து, ஸ்காட்லாந்து தொடரில் இருந்து ஸ்பென்சர் ஜான்சன் விலகல்!
ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஸ்பென்சர் ஜான்சன் காயம் காரணமாக இத்தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய நிலையிலும், அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.
மேற்கொண்டு இத்தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து அவருக்கான மாற்று வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் உள்ளிட்ட வீரார்கள் வரிசையில் உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியானது வரும் செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
Trending
அதன்படி ஸ்காட்லாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இதில் ஸ்காட்லாந்து டி20 தொடரானது செப்டம்பர் 04ஆம் தேதியும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கானொலி உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஸ்காட்லாந்து அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், இத்தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சென் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். இவர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய நிலையில், காயமடைந்து தொடரில் இருந்து விலகினார். மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.
இதனையடுத்து அவருக்கான மாற்று வீரராக சீன் அபோட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்கிற்கு இத்தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்பென்ஸர் ஜான்சனும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஸேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ் ஆகியோருடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேமரூன் க்ரீன், ஆரோன் ஹார்டி ஆகியோரும் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஆஸ்திரேலிய தொடர் ஆட்டவணை
- செப்டம்பர் 4: ஆஸ்திரேலியா v ஸ்காட்லாந்து, தி கிரேஞ்ச், எடின்பர்க்
- செப்டம்பர் 6: ஆஸ்திரேலியா v ஸ்காட்லாந்து, தி கிரேஞ்ச், எடின்பர்க்
- செப்டம்பர் 7: ஆஸ்திரேலியா v ஸ்காட்லாந்து, தி கிரேஞ்ச், எடின்பர்க்
- செப்டம்பர் 11: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன்
- செப்டம்பர் 13: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்
- செப்டம்பர் 15: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, ஓல்ட் டிராஃபோர்ட் மான்செஸ்டர்
- செப்டம்பர் 19: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, டிரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
- செப்டம்பர் 21: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, ஹெடிங்லி, லீட்ஸ்
- செப்டம்பர் 24: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, ரிவர்சைடு, செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்
- செப்டம்பர் 27: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, லார்ட்ஸ், லண்டன்
- செப்டம்பர் 29: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, கவுண்டி மைதானம், பிரிஸ்டல்
Win Big, Make Your Cricket Tales Now