
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்படி கடந்த 02ஆம் தேதி கொழும்புவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 198 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 91 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய விஸ்வா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமல் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 439 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 141 ரன்களையும், தினேஷ் சண்டிமல் 107 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கான் அணி தரப்பில் நவீத் ஸத்ரான 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.