
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய போதிலும் சதமடிக்கும் வாய்ப்பினை இருவருமே தவறவிட்டனர். ஷுப்மன் கில் 92 ரன்களிலும் (11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), விராட் கோலி 88 ரன்களிலும் (11 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனால் அணியின் ஸ்கோர் 300 ரன்களைக் கடந்தது. கே எல் ராகுல் 21 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து தில்ஷன் மதுஷங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.