
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி ஒன்றை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை அணியின் மிகமுக்கிய ஆல் ரவுண்டரான வநிந்து ஹசரங்கா காயம் காரணமாக எஞ்சியுள்ள ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது, தனது கடைசி ஓவரை வீசிய வநிந்து ஹசரங்கா அந்த ஓவரின் கடைசி பந்தின் போது காயமடைந்ததன் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.