
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் தற்பொழுது முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வர அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இறுதியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றில் தோற்று வெளியேறிய காரணத்தினால், இந்த தொடருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு குறைவாகவும் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் இதற்கு முன்பு கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தகுதி சுற்றிலும் தோற்று அந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள குளறுபடிகள், இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் தேசிய அணிக்கு விளையாட ஆர்வம் இல்லாமல் இருப்பது, மேலும் வெஸ்ட் இண்டீஸ் இளைஞர்கள் என் பி ஏ மாதிரியான கூடைப்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்துவது போன்றவை வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.