
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐபிஎல் நிர்வாகம் விதித்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன. இதில் மிகமுக்கியமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் தங்கள் வசம் இழுத்தது. அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை இந்தியன்ஸின் கேமரூன் க்ரீனை டிரேடிங்கில் வாங்கியது.
இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19ஆம் தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 212 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் பெற்றவர்களாகவும், 909 வீரர்கள் அறிமுக வீரர்களாகவும் இடம்பிடித்துள்ளனர்.